தென்னிந்திய கலாச்சாரத்தை கற்றுக்கொண்டு கடின உழைப்புடன் கூடிய நிதானமான விளையாட்டை என்னால் வெளிப்படுத்த முடிந்தது – மகேந்திர சிங் டோனி

இந்தியா சிமெண்ட்ஸ் துணைத்தலைவர் மற்றும் முன்னாள் பிசிசிஐ தலைவரான சீனிவாசன் எழுதிய புத்தகம் காபி டேபிள் (COFFEE TABLE). இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

காபி டேபிள் புத்தகத்தின் முதல் பிரதியை முதலமைசர் பழனிசாமி வெளியிட, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி பெற்றுக் கொண்டார். மேலும், கிரிக்கெட் வீரர்கள் ராகுல் டிராவிட், கபில் தேவ் உள்ளிட்டோரும் முதலமைச்சரிடம் இருந்து புத்தகத்தைப் பெற்றுக்கொண்டனர்.
அப்போது எம்.எஸ்.டோனி பேசுகையில், சென்னை அணிக்கு தேர்வு செய்யப்பட்டதன் மூலம் தென்னிந்திய கலாச்சாரத்தை கற்றுக்கொண்டு கடின உழைப்புடன் கூடிய நிதானமான விளையாட்டை என்னால் வெளிப்படுத்த முடிந்தது.

சென்னை அணி எப்போதுமே கடினமாகவும்,நேர்மையாகவும் விளையாடும். என் ஆக்ரோஷத்தை நிதானப்படுத்தி பலமான நேர்மையான கிரிக்கெட் விளையாட தமிழ்நாடு எனக்கு உதவியது என குறிப்பிட்டார்.

இந்த விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சுப்பிரமணியன் சுவாமி மற்றும் சேவாக், யுவராஜ் சிங் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்று சிறப்பித்தனர்