உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

முதலாவது ‘உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு” மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 1966 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 முதல் 23 வரை நடத்தப்பட்டது.

இரண்டாவது ‘உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு” தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் 1968 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 3 முதல் 10 வரை நடத்தப்பட்டது.

இம்மாநாடு சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. தமிழ்நாட்டின் அன்றைய முதலமைச்சர் திரு. கா. ந. அண்ணாதுரை அவர்கள் முன்னிலையில் ஒருங்கிணைக்கப்பட்டது.

மூன்றாவது ‘உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு” ஐரோப்பாவில் உள்ள பிரான்சு நாட்டின் தலைநகர் பாரீசில் 1970 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 15 முதல் 18 வரை நடத்தப்பட்டது. இம்மாநாடு பிரான்சில் புகழ்பெற்ற ’பிரான்சுக் கல்லூரியில் நடைபெற்றது.

இம்மாநாடு பிரஞ்சுப் பேராசிரியர், மருத்துவர் திரு. ழான் ஃபில்லியொசா அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்றது, இவர் புதுச்சேரியில் ‘பிரஞ்சுக் கழகத்தை’ நிறுவியவர்.

நான்காவது ‘உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு” யாழ்ப்பாண நகரில் 1974 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 3 முதல் 9 வரை நடத்தப்பட்டது. இம்மாநாடு யாழ்ப்பாணத்தில் உள்ள வீரசிங்கம் மண்டபம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.

இம்மாநாடு வணக்கத்திற்குரிய திரு. சேவியர் தனிநாயகம் அடிகளாரால் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

ஐந்தாவது ‘உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு” தமிழ்நாட்டின் மதுரை மாநகரில் 1981 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 4 முதல் 10 வரை நடத்தப்பட்டது. இம்மாநாடு அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ம.கோ. இராமச்சந்திரன் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசின் ஆதரவுடன் நடைபெற்றது. இம்மாநாட்டின் பொழுது மதுரை தமுக்கம் திடல் அருகே தமிழன்னை சிலை திறக்கப்பட்டது.

1964 ஆம் ஆண்டு திரு. சேவியர் தனிநாயகம் அடிகளாரால் தொடங்கப்பட்டு 1966 முதல் அடிகளாரில் தலைமையில் முதல் நான்கு மாநாடுகள் நடைபெற்றது. 1980 ஆம் ஆண்டு அடிகளார் அவர்களின் மறைவிற்கு பிறகு நடைபெற்ற முதல் மாநாடு மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் மாநாடு. அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

ஆறாவது ‘உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு” இரண்டாவது முறையாக மலேசியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூர் நகரில் 1987 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 15 முதல் 19 வரை நடத்தப்பட்டது. இம்மாநாடு அன்றைய மலேசிய அமைச்சராகவும், ம.இ.கா தேசியத் தலைவராகவும் இருந்த திரு. சா. சாமிவேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஏழாவது ‘உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு” ஆப்ரிக்காவின் மொரிசீயசில் உள்ள மோகா நகரில் 1989 ஆம் ஆண்டு திசம்பர்த் திங்கள் 1 முதல் 8 வரை நடத்தப்பட்டது. இம்மாநாட்டின் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராக சப்பான் நாட்டைச் சேர்ந்த அறிஞர். திரு. நோபூரு கராசிமா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.