விவசாயிகள் தரமான சான்று பெற்ற விதைகளை பயன்படுத்தவும்- மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ், சான்று விதைகள் குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். உதவி ஆட்சியர் (பயிற்சி) மு.பிரதாப், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கே.ராஜசேகரன், வேளாண் இணை இயக்குநர் ர.செல்வசேகர், வேளாண் துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) கோ.துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமைத் தொடக்கி வைத்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி பேசியதாவது: திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள், தரமான, சான்று பெற்ற விதைகளை வாங்கிப் பயிரிட்டால், நிறைவான மகசூல் பெறலாம். தனியார் விதை விற்பனை நிலையங்களில் இருந்து விதைகளை வாங்கும்போது, விதைக்குரிய பயிர், ரகம், அளவு, தொகை, குவியல் எண், காலாவதி நாள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ரசீதை விற்பனையாளரின் கையொப்பமிட்டு, விவசாயிகள் பெற வேண்டும்.
விதை விற்பனை உரிமம் பெற்ற விற்பனையாளர்களிடம் இருந்து விதைகளை வாங்குவது அவசியம். இதைத் தவிர்த்து அரிசி ஆலை, மண்டி ஆகிய இடங்களில் விதைகளை வாங்கிப் பயிர் செய்வதை விவசாயிகள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றார்.
மேலும், சான்று விதைகள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு வழங்கினார். விவசாயிகளுக்கு சான்று விதைகள், பசுந்தாள் உரம் தயாரிப்பு மற்றும் படைப்புழு தாக்குதல் குறித்த பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, விதை சான்றளிப்பின் முக்கியத்துவம் குறித்து விதை சான்று உதவி இயக்குநர் கவுதம்குமார், தனியார் விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வு மேற்கொள்ளும் பணிகள் குறித்து விதை ஆய்வு துணை இயக்குநர் (வேலூர்) எம்.பத்மாவதி, விதைகளின் தரம் கண்டறிதல் குறித்து வேளாண் துணை இயக்குநர் (மாநிலத் திட்டம்) கே.வேலாயுதம் ஆகியோர் பேசினர்.
இதில், வட்டார வேளாண் உதவி இயக்குநர்கள், வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள், திருவண்ணாமலை, துரிஞ்சாபுரம், கீழ்பென்னாத்தூர், செங்கம், கலசப்பாக்கம் வட்டாரங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.