வந்தவாசி ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயிலுக்கான தேர் செய்யும் பணி தொடக்கம்

வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலின் தேரோட்டம் ஆண்டுதோறும் மாசி மாதமும், ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயிலின் தேரோட்டம் பங்குனி மாதமும் நடைபெற்று வந்தன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இந்தத் தேர்கள் சேதமடைந்ததால், அதன் பின்னர் தேரோட்டம் நடைபெறவில்லை.
இதையடுத்து, தேர்களை புதிதாக செய்ய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி, தேர் திருப்பணிக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வந்தனர். மேலும், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள் பங்களிப்பு பணத்தில் 2 தேர்களுக்கான தலா 5.5 அடி விட்டமும், ஒரு அடி அகலமும் கொண்ட 8 இரும்பு சக்கரங்கள் மற்றும் 4 அச்சுகள் ஆகியவை ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் செய்யப்பட்டு எடுத்து வரப்பட்டன.

இந்த நிலையில், 2 தேர்களையும் புதிதாக செய்ய தமிழக அரசு ரூ.60.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.
இதில், முதல்கட்டமாக சுமார் ரூ.30.50 லட்சத்தில் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயிலுக்கான தேர் செய்யும் பணி வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரர், ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயில்களின் அருகே  தொடங்கியது.
இதற்கான பூஜையில் பங்கேற்ற தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் புதிதாக தேர் செய்யும் பணியை தொடக்கி வைத்தார்.