திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி மற்றும் நாட்டியாஞ்சலி

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கோச்சிங் சென்டர் சார்பாக மாணவர்களுக்கான திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி மற்றும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி சன்னதி தெரு ஸ்ரீவேணுகோபால சுவாமி சன்னதியில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு கல்வி மைய முதல்வர் சீனிவாசன் தலைமை தாங்கினார். ஆங்கில ஆசிரியர் ராஜா வரவேற்றார். வந்தவாசி ஓட்டல் சங்க தலைவர் ஏ. நடராஜன் மற்றும் நெடுஞ்சாலை துறை தனி வட்டாட்சியர் திருமதி ப. வாசுகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேராசிரியை டாக்டர். ஆர். நர்மதா லட்சுமி அவர்கள் பங்கேற்று மார்கழி மாதத்தின் பங்களிப்பையும் குழந்தைகள் எவ்வாறு உடல் நலத்தை பேண வேண்டும் என்பது பற்றியும், சிறப்புரையாற்றினார். மேலும் மாணவர்கள் உடல் நலம் மற்றும் மன நலத்தை பாதிக்கக்கூடிய செயல்பாடுகளை பட்டியலிட்டார்.
இந்த நிகழ்வில் பழம்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு சி. ராஜேந்திரன், திருப்பாவை சொற்பொழிவாளர் ஆர். ஸ்ரீனிவாச ராமானுஜர் ஆகியோர் பங்கேற்று, திருப்பாவை செயல்பாடுகளை வாழ்த்துரையாக வழங்கினர். மாணவ-மாணவிகளின் திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி நடைபெற்று, அனைவருக்கும் பரிசுகளும், நோட்டுப் புத்தகங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும் மார்கழிமாத நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. கலைச்சுடர்மணி பெ. பார்த்திபன், வங்கை சு. அகிலன் ஆகியோரது ஆன்மீக பாடல்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வின் இறுதியில் கோயில் நிர்வாகி பரந்தாம ராமானுஜ தாசர் நன்றி கூறினார்.