திருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் தலா ரூ.1,000 வழங்கும் பணி தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 லட்சத்து 29 ஆயிரத்து 677 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் தலா ரூ.1,000 வழங்கும் பணியை ஆரணி வைகை கூட்டுறவுக் கடையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தார்.
ஆரணி வைகை கூட்டுறவு கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன், ஆரணி எம்.பி. செஞ்சி வெ.ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு இணைப் பதிவாளர் ப.ரேணுகாம்பாள் தலைமை வகித்தார்.

பொங்கல் திருநாளையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 லட்சத்து 71ஆயிரத்து 643 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், 73 ஆயிரத்து 70 அந்தியோதயா அன்னயோசனா அட்டைகள்,
73 ஆயிரத்து 655 முதியோர் உதவித்தொகை பெறும் அட்டைதாரர்கள், 7 ஆயிரத்து 434 சர்க்கரை பெறும் அட்டைதாரர்கள், 1,490 காவல் துறைப் பணியாளர்களுக்கான குடும்ப அட்டைதாரர்கள், 1,188 அன்னபூர்ணா குடும்ப அட்டைதாரர்கள், 96 எப்பொருளும் பெறாத அட்டைதாரர்கள், இலங்கை அகதிகள் முகாமில் உள்ள 1,011 குடும்ப அட்டைதாரர்கள் என மொத்தம் 7,29,677 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய், கரும்பு அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் தலா ரூ. ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.

விழாவில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் தலா ரூ.1,000 வழங்கியதுடன், மாவட்டம் முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடக்கிவைத்தார். பின்னர், அவர் பேசியதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 7 லட்சத்து 29 ஆயிரத்து 677 குடும்ப அட்டைதாரர்களுக்கும் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப் பணமும் வழங்கப்படுகிறது. மேலும், 6 லட்சத்து 12 ஆயிரத்து 837 குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டிகளும், 6 லட்சத்து 13 ஆயிரத்து 747 குடும்ப அட்டைதாரர்களுக்கு சேலைகளும் வழங்கப்படுகின்றன.

கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு வழங்கி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடும் வகையில், கடந்த 1983-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் இலவச வேட்டி – சேலை வழங்கும் திட்டத்தை தொடக்கிவைத்தார். அவரைத் தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், தற்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியும் இந்தத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர். இதேபோல, தமிழக மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது என்றார் அவர்.
விழாவில், வைகை கூட்டுறவு சங்கத் தலைவர் பிஆர்ஜி.சேகர், அரசு வழக்குரைஞர் க.சங்கர், ஜெயலலிதா பேரவை நகரச் செயலர் பாரி பி.பாபு, நகரச் செயலர் எ.அசோக்குமார், மேற்கு ஒன்றியச் செயலர் அரையாளம் எம்.வேலு, பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.கஜேந்திரன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் அ.கோவிந்தராசன், மாவட்ட துணைச் செயலர்கள் டி.கருணாகரன், அமுதா அருணாச்சலம், பட்டு கூட்டுறவு சங்கத் தலைவர் சேவூர் ஜெ.சம்பத், வைகை கூட்டுறவு சங்க துணைத் தலைவர் குமரன், பொதுக்குழு உறுப்பினர் சி.சின்னக்குழந்தை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். மக்களவை உறுப்பினர்கள் செஞ்சி சேவல் வெ.ஏழுமலை (ஆரணி), ஆர்.வனரோஜா (திருவண்ணாமலை), மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் பா.ரேணுகாம்பாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000, பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கும் பணியைத் தொடக்கி வைத்தார்.