திருவண்ணாமலை மாவட்டத்தின் ஊர்ப் பெயர்களை மாற்றியமைக்க ஆலோசனைகள் வரவேற்பு

திருவண்ணாமலை மாவட்டத்தின் ஊர்ப் பெயர்களை தமிழில் உள்ளதுபோலவே ஆங்கிலத்திலும் மாற்றியமைக்க உரிய ஆலோசனைகளை வழங்கலாம் என்று பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமைக்க 2018 – 19ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையில் தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டு, அரசாணையும் வெளியிடப்பட்டது.
எடுத்துக்காட்டாக, திருவல்லிக்கேணி என்பதை ட்ரிப்ளிக்கேன் என்று ஆங்கிலத்தில் (எழுத்துக்கூட்டல்) குறிப்பிடாமல், திருவல்லிக்கேணி என்றே ஆங்கிலத்தில் உச்சரிப்பும், எழுத்துக்கூட்டலும் அமையும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணியை செயல்படுத்த திருவண்ணாமலை மாவட்டத்தில் உயர்நிலைக் குழு, ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டு, பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் ஊர்ப் பெயர்களின் பட்டியலை அதற்கு இணையான ஆங்கில எழுத்துக்கூட்டலை மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையுடன் மாற்றி அமைக்கப்படும். எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊர்ப் பெயர்களின் உச்சரிப்பு தமிழில் அமைந்துள்ளது போலவே ஆங்கிலத்தில் அதன் ஒலிக்குறிப்பு மாறாமல் அமைந்திட நடவடிக்கை எடுத்து, மாற்றப்பட வேண்டிய ஊர்ப் பெயர்களின் பட்டியலையும், அதற்கு இணையான ஆங்கில உச்சரிப்பு எழுத்துக் கூட்டலையும் உரிய படிவத்தில் நிறைவுசெய்து அனுப்புமாறு பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
நிறைவு செய்த படிவங்களை தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருவண்ணாமலை என்ற முகவரிக்கோ அல்லது p​a‌n‌d‌u‌p‌o‌o‌n‌d‌i@‌g‌m​a‌i‌l.​c‌o‌m என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.