திருவண்ணாமலை மாவட்டத்தில் 15,481 பேர் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதினர்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில், குரூப் – 2 பணிக்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்வுக்காக திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 19 ஆயிரத்து 561 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களுக்காக, திருவண்ணாமலை உள்பட மாவட்டம் முழுவதும் 46 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எழுத்துத் தேர்வை 15 ஆயிரத்து 481 பேர் எழுதினர். தேர்வுப் பணியில் 73 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 14 நடமாடும் குழுக்கள், 73 விடியோ கிராபர்கள் ஈடுபட்டனர். தேர்வு முறைகேடுகளைத் தடுக்க 7 பறக்கும் படை அலுவலர்கள், 73 ஆய்வு அலுவலர்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
ஆட்சியர் ஆய்வு: திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி நேரடி ஆய்வில் ஈடுபட்டார். தேர்வர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.